பதிவு செய்த நாள்
28
மார்
2013
11:03
தலைவாசல்: தலைவாசல் அருகே உள்ள, வனதுர்க்கை அம்மன் கோவிலில், ராமர், சீதா தேவி, லட்சுமணரை வழிபாடு செய்தால், அரசியல் கட்சியினருக்கு பதவி கிடைப்பதாக தகவல் பரவி வருவதால், ஆளும் கட்சியினர் உள்ளிட்டோர், "ரகசிய பூஜை செய்வதற்கு படையெடுத்து வருகின்றனர். தலைவாசல் அடுத்த, தென்பொன்பரப்பி கிராமத்தில், 300 ஆண்டுக்கு மேல், பழமை வாய்ந்த, வனதுர்க்கை அம்மன் கோவில், பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் பகுதி முழுவதும், உசிலம் மரத்தை தவிர, வேறு மரங்கள் இல்லை. உசிலம் மரத் தோப்புக்குள் சென்றால், கடும் வெயில் கூட தெரியாமல், உடலில் குளிர்ச்சி தெரிகிறது. வனதுர்க்கை கோவில் வளாகத்தில், ராமர், சீதா தேவி மற்றும் லட்சுமணர் சிலையும், காவல் தெய்வங்களின் சிலை அதிகளவில் உள்ளன. வன துர்க்கை, ராமர் ஸ்வாமியை வழிபாடு செய்யும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், அவர்களது உருவத்தில் சிலை பிரதிஷ்டை செய்கின்றனர். இதில், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் பலர், பதவி வேண்டி பரிகார பூஜை செய்துள்ளனர். அதில், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர், இக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததும், அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால், கோவிலுக்கு மேற்கூரை அமைத்தல் போன்ற பணிகள் செய்வதாக, உறுதியளித்துச் சென்றுள்ளார். அதேபோல், அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியினர் உள்ளிட்டோருக்கு, "பலன் கிடைத்துள்ளதால், ஆத்தூர், தலைவாசல் பகுதியை சேர்ந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
திருமண தடை நீக்கும் மஞ்சள் விநாயகர்: பனமரத்துப்பட்டி: மல்லூர் சுனை கரடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பகுள விநயாகருக்கு, மஞ்சள் கொம்பு மலை போட்டு, வேண்டுதல் வைத்தால்,திருமணம் கைகூடும் என, பக்தர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சேலம் மாவட்டம் மல்லூர் சுனைகரடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருமலைநாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு, வறட்சி காலத்திலும் குளத்தில் இருக்கும் சுனை நீர் வற்றாத அதிசயமாக உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து திருசெங்கோடு சென்ற சிவபெருமாள், சுனை கரட்டில் கால் பதித்து சென்றதாக ஐதீகம் உள்ளது. அதனால், சிவபெருமானின் கால் பாதத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சுனைகரட்டில் இருந்து, மேற்கு நோக்கி பார்த்தால், திருசெங்கோடு மலை தெரியும். சிறப்பு வாய்ந்த சுனைகரட்டில், தெப்ப குளம் அருகே உள்ள விநாயகரை வழிபட்டால், திருமண தடை நீங்குவதாக பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். விநாயகர் சிலைக்கு, மஞ்சள் கொம்பு 108, 54 என்ற எண்ணிக்கையில் மாலையாக தொடுத்து, 9 அம்மாவாசை அணிவிக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற எண்ணிக்கையில், விநாயகரை வலது பக்கமாக சுற்றிவந்து வணங்க வேண்டும். இந்த பூஜை செய்து, விநாயகரை வழிபட்டு வரும் பக்தருக்கு 9மாதத்திற்குள் திருமணம் கைகூடிவிடும். அம்மாவாசை நாளில், திருமணம் வேண்டி ஆண்களும், மாங்கல்யம் வேண்டி பெண்களும் விநாயகர் சிலை மஞ்சம் கொம்பு மாலை அணிவித்து வணங்கி வருகின்றனர்.