பதிவு செய்த நாள்
28
மார்
2013
11:03
சேலம்: சேலம் செரிரோட்டில் அமைந்துள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், நேற்று, பக்தர்கள் பொங்கல் வைத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். கோவிலில், மார்ச், 19ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 26ம் தேதி சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் பரிவாரங்களுடன், கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை, 6 மணியில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 8 மணி முதல், பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பகல், 12 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர். சேலம் வின்சென்ட், மணக்காடு, ஜான்சன்பேட்டை, சின்னப்புதூர், பொன்னம்மாப்பேட்டை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திச் சென்றனர். இன்று மாலை, 4 மணிக்கு, பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.