பதிவு செய்த நாள்
28
மார்
2013
11:03
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று தேர்த்திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஓசூர் தேர்ப்பேட்டை சந்திரசூடேஸ்வரர் மலை மீது, ஆயிரம் ஆண்டு பழமையானது. இக்கோவிலில், கடந்த, ஆயிரத்து, 375 ஆண்டாக பங்குனி தேர் திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 1850ம் ஆண்டு பிரிட்டிஷார் ஆட்சியில், இந்த கோவில் தேர்கள் புனரமடைக்கப்பட்டன. சந்திரசூடேஸ்வரர் அமரும் பெரிய தேரை இழுக்கும் சங்கிலிகள் மற்றும் சக்கரங்களை ஒருங்கிணைக்கும் ஆக்சில் ஆகியவை இங்கிலாந்தில் தயார் செய்து, அங்கிருந்து கப்பல் மூலம் ஓசூர் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட, இந்த கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது. இந்த தேர்த்திருவிழாவை காண, நேற்று கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் ஸ்வாமிகளை மலைக்கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக தேர்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். சந்திரசூடேஷ்வரருக்கும், மரகதாளம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பாகலூர் பாளையக்ககாரர்கள் அம்மனுக்கு சீதனமாக பட்டுசேலை உடுத்தி, சிறப்பு பூஜை பொருட்கள் வழங்கினர். நேற்று காலை, 9.45 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது. தேரை கலெக்டர் ராஜேஷ், நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, துணைத்தலைவர் ராமு, ஒன்றிய சேர்மன் புஷ்பா சர்வேஷ், சப்-கலெக்டர் பிரவீன் நாயகர் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தேரோட்ட குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஏ.மனோகரன், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் வாசுதேவன், நாகராஜ், இளையபெருமாள், சீனிவாசன், ரமேஷ், முத்துராஜ், நந்தகுமார், பஸ்தி சீனிவாசன், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சிட்டிஜெகதீஷ், ம.தி.மு.க., நகர செயலாளர் வெள்ளைச்சாமி, முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதலில் விநாயகரும், இரண்டாவது தேரில் சந்திரசூடேஸ்வரரும், மூன்றாவது தேரில் மரகதாம்மாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேர்வீதியில் தேர் சென்றபோது, பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மீது உப்பு, வாழைப்பழம், வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். தேர்ப்பேட்டை தெப்பக்குளத்தில் வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தி நீராடினர். தேர்ப்பேட்டை வீதிகளில் சென்ற மூன்று தேர்களும் மாலை நிலையை வந்தடைந்தது. தேர்த்திருவிழாவையொட்டி நகரின் முக்கிய சாலைகளில் பக்தர்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் அன்னதானம், மோர் பந்தல், தர்பூசணி மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.