எமதர்மன் ஒருமுறை பெருமாளைச் சந்தித்தான். கருடவாகனத்தில் தனது உலகமான எமலோகத்திற்கு (நரகம்) எழுந்தருளவேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மகாவிஷ்ணுவும் ஒப்புக்கொண்டு வந்தார். அவரை எமதர்மன் மகிழ்ச்சியோடு வரவேற்றான். நரகத்தின் தெற்கு திசையில் இருந்து அழுகையும், கூக்குரலும் கேட்டது. குரல் கேட்ட திசை நோக்கி நடந்தார் பெருமாள். அங்கே, பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று ஏகாதசி திதி. இன்று ஏகாதசி ஆயிற்றே! என்று வாய்விட்டு சொன்னார். அந்த நிமிஷமே அவர்களின் பாவம் அனைத்தும் நீங்கிவிட்டது. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், ஏகாதசி விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குப் போய் வந்தால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.