உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். இறைவனை அன்னத்தால் அலங்கரித்து வழிபட்டால், செல்வமும், சுபிட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி நேற்று, அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. 100 கிலோ அரிசி கொண்டு சாதம் வடித்து, அருணாசலேஸ்வரர் மூலவர் மற்றும் 4ம் பிரகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு, அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அன்னாபிஷேகத்தையொட்டி நேற்று மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை, 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அருணாலேஸ்வரர் கோவில், அஷ்ட லிங்கங்கள், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் ஆகிய சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்றிரவு, 9:43 மணி முதல், இன்று, 5ம் தேதி இரவு, 7:27 மணி வரை ஐப்பசி மாத பவுர்ணமி திதி உள்ளதால், ஏராளமான பக்தர்கள் நேற்றிரவு முதல், கிரிவலம் சென்றனர்.