மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடத்தில் வைத்தீஸ்வருக்கு விவசாயம் செழிக்க, மக்கள் நோய் தாக்கலில் இருந்து வெளி வர ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் இன்று நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடம் உள்ளது. இங்கு சிவன் வைத்தீஸ்வரர் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதனையொட்டி ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வைத்தீஸ்வரருக்கு இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு வைத்தீஸ்வருக்கு வில்வம், திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள், பால், சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 8.30 மணிக்கு விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் தாக்கலில் இருந்து வெளிவர வேண்டியும் வைத்தீஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வைத்தீஸ்வரருக்கு 15 கிலோ அன்னம், 30 கிலோ காய்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர், சரவணம்பட்டி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மயூரம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.