பதிவு செய்த நாள்
05
நவ
2025
05:11
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 கிலோ காய்கறிகளால் அலங்காரம் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தஞ்சை பெரிய கோயில், பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஐப்பசி பெளர்ணமியிலும் நாட்டில் உணவு பஞ்சம் இன்றி பொதுமக்கள் செழிப்புடன் வாழ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னம், 500 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அன்னாபிஷேகத்திற்கு பக்தர்கள் வழங்கிய அரிசி சாதமாகத் தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. இதனையடுத்து பூசணிக்காய், வாழைக்காய், வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், பாகற்காய், தர்பூசணி, பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு, வெண்டை, சுரைக்காய், மிளகாய், சோளம், கத்தரிக்காய், புடலங்காய், ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் தரிசனம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு, அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மேலும், ஜீவராசிகள் உண்ணும் வகையில் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.