பதிவு செய்த நாள்
05
நவ
2025
01:11
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது லிங்கத் திருமேனிக்கு அன்னம் சாத்துவதற்காக சாதம் வடிக்கும் பணிகள் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. கங்கை வரை படையெடுத்து, கடாரத்தை வென்று அங்கு வெற்றி பெற்றதன் அடையாளமாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் மாநகரை மாமன்னன் ராஜேந்திர சோழன் தலைநகரமாகக் கொண்டு உருவாக்கினார். அத்தோடு மட்டுமின்றி குறிப்பாக அந்த இடத்தில் வின்னை முட்டும் அளவிற்கு, வானுயர்ந்த கோபுரத்தை எழுப்பி, பிரகதீஸ்வரர் கோவிலையும் மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டினார். உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவில் தற்போது உலக புரதான சின்னங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டும், உலக நாடுகளில் வியக்கும் அளவிற்கு கட்டிடக்கலைக்கு சான்றாகவும் இக்கோவில் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தில் 41- வது அன்னாபிஷேக விழாவானது கடந்த 3-ம் தேதி கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகங்கள் நேற்று விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேக விழா இன்று காலை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஆசியாவிலேயே மிகப் பெரிய லிங்கமாக கருதக் கூடிய பிரகதீஸ்வரர் சுவாமிக்கு இன்று மாலை 100 மூட்டை அரிசியால் சாதம் வடிக்கபட்டு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு லிங்கத்தின் மீது அபிஷேகம் நடத்த இருக்கின்றனர். அதற்காக வேண்டி தற்போது அன்னம் வடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ராட்சச இயந்திரங்களைக் கொண்டு சாதம் வடிக்கும் பணிகளை காஞ்சி சங்கரமட குழுவினர் செய்து வருகின்றனர். வடிக்கப்பட்ட சாதங்கள் கூடை கூடையாக எடுத்துச் சென்று சுவாமிக்கு அலங்காரம் செய்ய உள்ளனர். குறிப்பாக இன்று மாலை சரியாக 6:00 மணி அளவில் பிரகதீஸ்வரர் சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு அரிசிகளும், ஒவ்வொரு லிங்கமாக கருதப்படுவதால் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் நோய் நொடிகள் நீங்கி கோடி புண்ணியம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் அது மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் அன்னாபிஷேக விழாவில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடம், இந்து சமய அறநிலையத் துறையினர், மற்றும் கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டு குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.