பதிவு செய்த நாள்
28
மார்
2013
02:03
தன்னுடைய குற்றங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பிறருடைய குற்றங்களைக் கண்டுகொள்ளக் கூடாது. இவ்வாறு இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். உலகம் முழுவதையும் அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், இவ்வுலகில் எவரும் உங்களுக்கு அந்நியரல்ல, உலகம் உங்களுடையது. இறைவனின் விருப்பத்தில் அனைத்து செயல்களும் நடப்பது உண்மையே. அதேநேரம், மனிதனின் செயல்கள் மூலமே இறைவனின் விருப்பம் வெளியாகிறது.
நம்பிக்கையும், உறுதியுமே வாழ்க்கைக்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் அனைத்து செல்வங்களும் இருப்பதாக அர்த்தம். இவற்றை உடையவர்கள் வீரமாக நடை போடுவர். வெற்றிக்கடலில் நீந்தி மகிழ்வர். உன்னுடன் வாழும் உயிர்களில், ஏதாவது ஒன்றுக்காவது உன்னால் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமானால், உன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டதாக பொருள். இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை, இறைவனை நேசிப்பவன் மட்டுமே புண்ணியவானாகிறான்.
பரிசுத்தமான மனம் உடையவன் வாழ்க்கையில் அனைத்தையும் பரிசுத்தமானதாகவே காண்கிறான். சோம்பலால் உடல் மட்டுமல்ல, மனமும் கெட்டுவிடுவதால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். ஒருவன் 24 மணிநேரமும் பிரார்த்தனைக்கு செலவிட முடியாது, மற்ற நேரத்தைப் பணிபுரிவதில் செலவிட்டால், அதுவே மனம் தூய்மை அடைய வழிவகுக்கிறது. மனிதன் என்று அழைக்க வேண்டுமானால் அவனுக்கு கருணையும், இரக்கமும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.