பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
10:04
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக, 52 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்கும் விடுதி கட்டும் பணி நடந்து வருகிறது.திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கோவில் வளாகத்தில், பக்தர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி இல்லாததால், இரவு நேரங்களில், இங்கு வரும் பக்தர்கள், கோவில் வளாகத்திலும், முன்புறம் உள்ள சிமென்ட் சாலைகளிலும், பாதுகாப்பற்ற முறையில் படுத்து உறங்க வேண்டியுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வாக, 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டுவதற்கு, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 5,200 சதுரடியில், 10 அறைகளுடன் தங்கும் தங்கும் விடுதி கட்டுவதற்கு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதே போல், முடி திருத்தும் கொட்டகை, 16.5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,""பக்தர்களின் வசதிக்காக, தங்கும் விடுதி மற்றும் முடி திருத்தும் கொட்டகை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், வரும், மே மாதத்திற்குள் நிறைவடையும், என்றார்.