பதிவு செய்த நாள்
04
ஏப்
2013
10:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில், நடந்த குண்டம் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த 19ம் தேதி சக்தி கும்ப ஸ்தானத்துடன் துவங்கியது. கடந்த 21ம் தேதி கோவில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், 27ம் தேதி கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு அபிஷேக செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, பழநி, நல்லூத்துக்குளி, கூடுதுறை, சேத்துமடை தெய்வகுள காளியம்மன் கோவில் பகுதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கடந்த 2ம் தேதி, காலை 7.00 மணிக்கு, குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.00 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8.00 மணிக்கு, அகத்தூர் அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9.00 மணிக்கு, குண்டம் 60 அடி நீளம், நான்கு அடி அகலமும் கொண்ட குண்டத்தில் "பூ வளர்க்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து குழியிலிட்டு பூ வளர்த்தனர். முக்கிய நிகழ்ச்சியான "குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, "பூ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் மற்றும் மாவிளக்கு படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. குண்ட பணிகளை, கோவில் பரம்பரை குருக்கள் தங்கமணிகண்டீஸ்வரர் செய்தார். குண்டத்துக்கு, ஜமீன்தாரர் அருண்குமார் காளிங்கராயர் தலைமை வகித்தார். தொடர்ந்து, வரும் 5ம் தேதி, காலை 9.00 மணிக்கு சுவாமி ஊர்வலமும், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 8.00 மணிக்கு, மகா அபிஷேகமும், ஆராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.