பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
புதுச்சேரி: வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதுகுறித்து, ஆலய பங்குத் தந்தை ரிச்சர்ட் அடிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வில்லியனூரில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தூய லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த ஆறாவது நாளில், ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கும். இந்த ஆண்டு திருவிழா, நாளை (6ம் தேதி), கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 5.30 மணிக்கு, மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து, மாதாவின் திருக்கொடி, மாதா குளத்தைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடி மரத்தில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் கொடியேற்றுகிறார். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் திருப்பலி, மறையுரை, தேர் பவனி போன்றவை நடக்க உள்ளன. 14ம் தேதி காலை 7.30 மணிக்கு, புதுச்சேரி, கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி, அன்று இரவு 7.30 மணிக்கு, ஆடம்பர தேர் பவனி நடைபெறும். 15ம் தேதி காலை 6.00 மணிக்கு, திருப்பலிக்குப் பிறகு, கொடியிறக்கம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பங்குப் பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ பணிக்குழு உள்ளிட்டோர் இணைந்து செய்கின்றனர்.இவ்வாறு ரிச்சர்ட் கூறினார்.