பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை பயன்படுத்தி, அதே சமயம் வாடகை செலுத்தாத முதல் 10 நபர் பெயரை, கோயில் நிர்வாகம் பிளக்ஸ் போர்டில் வெளியிட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தென்னந்தோப்பு, காலி இடம், வணிக கடைகளை வைத்துள்ளோர் வாடகை மற்றும் குத்தகையை, பல ஆண்டுகளாக செலுத்தாமல், இழுத்தடிக்கின்றனர். பாக்கியை வசூலிக்க, கோவில் நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்காத அளவுக்கு அவர்கள் சரிக்கட்டி வருவதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு பல லட்சம் ரூபாய் குத்தகை பாக்கி உள்ளது. இந்நிலையில், கோயில் சொத்தை ஆக்கிரமித்து, வாடகை செலுத்தாமல் உள்ள குத்தகைதாரர், ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க, மாநில அரசு தற்போது உத்தரவிட்டது. சமீபத்தில், ராமேஸ்வரம் கோவிலில் ஆய்வு செய்த, இந்து அறநிலையத்துறை கமிஷனர், வாடகை பாக்கி வைத்துள்ள, "டாப்-10 பெயர் பட்டியல் வெளியிடும்படி, உத்தரவிட்டார். அதன்படி, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் நடவடிக்கை எடுத்தார். ராமேஸ்வரத்தில் வாடகை செலுத்தாமல், இழுத்தடித்த முதல் 10 பேரின் பெயர் விவரத்தை, பிளக்ஸ் போர்டில் விளம்பரப்படுத்தி, ராமேஸ்வரம் கோவில் கிழக்கு, மேற்கு வாசலிலும் , பேருந்து நிலையத்திலும் வைக்கப்பட்டு உள்ளது. இது போன்று, வெளி மாவட்டங்களில் , வாடகை பாக்கியை செலுத்தாமல் இழுத்தடிக்கும், "டாப்-10 பெயர் பட்டியலை, அந்தந்த மாவட்டங்களில் முக்கிய இடங்களில் போர்டு வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.