பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில்,நேற்று கருடசேவைஉற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில்,பொய்கை ஆழ்வார் அவதார ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம் போல், இந்த ஆண்டு உற்சவம், கடந்த 2ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை, வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடந்து வருகிறது. மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று, பிரபல உற்சவமான கருட சேவை உற்சவம் நடந்தது. காலை 6:00மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில், பெருமாள் எழுந்தருளினார். அதன்பின், மேளதாளங்கள்ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, பெருமாள் வீதியுலா புறப்பட்டார். பின், டி.கே.நம்பித்தெரு, செட்டித் தெரு, மாட வீதிகளை வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று, பெருமாளை வழிபட்டனர். மாலை, ஹனுமந்த வாகன உற்சவம்நடந்தது.நான்காம் நாளான இன்று, காலை 6:00 மணிக்கு, சேஷவாகனத்தில், பெருமாள் பரமபதநாதன் திருக்கோலத்தில் வீதியுலா வர உள்ளார். மாலை 6:00 மணிக்கு, சந்திரபிரபைஉற்சவம் நடைபெறும்.