பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பஞ்., நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த மாதம் 20-ந்தேதி இரவு அம்மனுக்கு காப்பு கட்டுதல் துவங்கி 15 நாள்கள் விழா நடந்தது. முதலில் விழா துவக்கமாக ஆயக்கால் போடுதல், அம்மன் அழைத்தல், அம்மன் ஊஞ்சல் ஆடுதல் , ஆகியவை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான, அம்மன் ரதம் ஏறுதல், மாவிளக்கு பூஜையும், பொங்கல் பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. பூரிதானம் கொடுத்தல் நிகழ்ச்சியும், தேர்நிலை பெயர்தல், குழிவெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து கடந்த 29 தேதி, இரவு 12 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, நிலையத்தை வந்தடைந்தது. இரண்டாம் நாள் நிகழ்சியாக அம்மன் வண்டிக்கால் பார்த்து வருதல், காலை 6 மணிக்கு அம்மன் ஆற்றுக்கு சென்று நீராடி வருதல், 10 மணிக்கு காப்பு அவிழ்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 11 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து பூசாரியப்பன் அரிவாள் மீது ஏறி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து முப்பாட்டு காரரை அழைத்து விடும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தர்மகர்த்தா, காப்பு கட்டி பண்டாரம் ஆகியோரை அழைத்து விடும் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.