பதிவு செய்த நாள்
06
ஏப்
2013
10:04
திருநீர்மலை:திருநீர்மலை கோயிலில், பங்குனி பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான ஏப் 5,, நீர்வண்ணர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில், வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில், பங்குனி விழா பிரம்மோற்சவம், கடந்த மாதம், 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு, சேஷ வாகனம், கருட வாகனத்தில், நாச்சியார் திருக்கோலத்தில், நீர்வண்ண பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான ஏப் 5,, காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், நீர் வண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிந்தாதிரிப்பேட்டை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள, ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில், ரத உற்சவம் நடந்தது. இந்தக் கோயிலில், மார்ச், 27ம் தேதி துவங்கிய பிரம்மோற்சவ விழா, ஏப்., 6ம் தேதி வரை, கோலாகலமாக நடக்க உள்ளது. ரத உற்சவத்தை முன்னிட்டு, ஏப் 5, காலை, 6:00 மணிக்கு, ஆதிகேசவப் பெருமாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்கார தரிசனமும் நடந்தது. அதை தொடர்ந்து, முக்கிய விதிகளில், பெருமாள் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூ, வாழை பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, காணிக்கை செலுத்தி,வழிபட்டனர்.