பதிவு செய்த நாள்
08
ஏப்
2013
10:04
திருத்தணி:முருகன் கோவிலில், வரும் தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வரும், 14ம் தேதி நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தங்ககிரீடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்றைய தினம், கோவில் நடை, இரவு முழுவதும் திறந்து வைக்கப்படும். அன்று காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் புறப்படும். பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, 1,008 பால்குடம் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும். மூலவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், முருகன் கோவிலின் உபகோவிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலிலும் தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால் குட அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.