பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
10:04
சேலம்: திருப்பதியில் நடைபெறும் யுகாதி பண்டிகைக்காக, ஒரு டன் பூக்கள் சேலத்திலிருந்து லாரி மூலம் அனுப்பப்பட்டது. திருமலை, திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், திருப்பதி திருமலையில் நடைபெறும் யுகாதி பண்டிகைக்கு (தெலுங்கு வருட பிறப்பு) பூக்களை மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி, சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி தேவாங்க மகாஜன சமுதாயக்கூட திருமண மண்டபத்தில் நேற்று காலை, 7.30 மணி முதல் மாலை, 3 மணி வரை, நடந்தது. சாமந்தி, மேரிகோல்டு, துளசி, துலுக்கு சாமந்தி, அரளி, சம்மங்கி, மருகு, ரோஜா, மல்லிகை ஆகிய தரமுள்ள வாசமுள்ள உயர்ரக பூக்களை, பக்தர்கள் கொண்டு வந்திருந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், பூக்களை மாலைகளாக தொடுத்தனர். பின்னர், மாலைகளை பாதுகாப்பாக லாரிகளில் ஏற்றி அனுப்பினர். திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளையினர் கூறியதாவது: திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், ரதசப்தமி, யுகாதி பண்டிகை மற்றும் முக்கிய நாளில், சேலத்தில் இருந்து பூக்கள் மாலைகளாக தொடுக்கப்பட்டு, திருமலை தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் வரை, 17 டன் பூக்கள் சேலத்திலிருந்து திருப்பதி மலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தாண்டு யுகாதி பண்டிகைக்கு, ஒரு டன் பூக்கள் திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சேலம், மகுடஞ்சாவடி, ஈரோடு, சங்ககிரி, உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் பூக்களை மாலைகளாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.