பதிவு செய்த நாள்
11
ஏப்
2013
11:04
ராசிபுரம்: கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, தொன்று தொட்டு நடந்து வரும் முகாம் நீதிமன்றத்தில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியில், பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்வாமி அன்னம், சிம்மம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை, 9 மணிக்கு, ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துசாமி, அறநிலையத் துறை இணை கமிஷனர் மங்கையர்கரசி, நாமகிரிப்பேட்டை யூனியன் சேர்மன் பொன்னுசாமி, புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணி, கோவில் செயல் அலுவலர் ராஜாராம், பரம்பரை அறங்காவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, பாலசுந்தரம் உளிளிட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, உருளுதண்டம் போட்டபடி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்துவரப்பட்டது. திருவிழாவையொட்டி, ஆங்கிலேயர் காலம் முதல் தொன்று தொட்டு நடந்து வரும் முகாம் நீதிமன்றம், புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. ராசிபுரம் குற்றவியல் நீதிபதி முத்துசாமி தலைமை வகித்தார். அதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது உள்பட, 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, 22 ஆயிரத்து 900 ரூபாய் அபாரதம் வசூல் செய்யப்பட்டது. இன்று (ஏப்., 11) இரவு, 7 மணிக்கு ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், திருவீதி உலா வந்து சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது.