பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேர் திருவிழாவையொட்டி, அன்னதானம் செய்பவர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கக்கூடாது, என்று கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத்தேர் திருவிழாவையொட்டி, மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு குறித்து கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது:சித்திரைத் திருவிழாவுக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் தேவையான வசதிகள் மற்றும் தேவையான அளவு பாதுகாப்பு அளித்திட வேண்டும். போலீஸாருடன், கோவில் நிர்வாகமும், டவுன் பஞ்சாயத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். துப்புரவுப்பணியில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தியும், தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்காக லாரிகள் மூலமும் நடமாடும் குடிநீர் வண்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதுடன், 100 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கவேண்டும்.தடையில்லா மின்சாரம் வரும், 16ம் தேதி முதல், 19ம் தேதி வரை, தங்கு தடையின்றி மின்சாரமும், கூடுதல் பஸ் வசதியும் செய்யப்படுகிறது. ஆட்டுமந்தை, துறையூர் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, அங்கு தேவையான அளவு மின்விளக்கு வசதி செய்யப்படவிருக்கிறது.
பொது தொண்டு நிறுவனம் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்துடன் இணைந்து போதுமான அளவு தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்கவேண்டும். விபத்து மற்றும் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன், தெப்பக்குளம், பள்ளிவிடைப்பாலம் ஆகிய மூன்று இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.சமயபுரம் நுழைவாயிலிருந்து தேரோடும் வீதி வரை, குறிப்பாக, தேரடி, பஸ்ஸ்டாண்ட் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில், இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து தரைக்கடைகளும் அகற்றப்படும்.மேலும், 1,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆர்.சி.சி., மண்டபம் முதல், கோவில் பின்வாசல் வரை, 10 இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. விழா அன்று, சென்னை பைபாஸ் சாலை நான்கு ரோடு சந்திப்பிலிருந்து, சமயபுரம் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.தேசிய நெடுஞ்சாலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு மின்னணு விளம்பரப்பலகைகள் வைக்கப்படுகிறது. திருச்சி- சென்னை பைபாஸ், சமயபுரம் நுழைவாயில், சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன், திருக்கோவில் திருமண மண்டபம் நுழைவாயில், கடைவீதி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்களும், ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அன்னதான நிபந்தனைஹோட்டல்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதும், தரமான, சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் சமைத்து வழங்கப்படுகிறதா? என்பதையும் கண்டறிய, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வுப்பணி மேற்கொள்ள இருக்கின்றனர்.எனவே, அன்னதானம் வழங்க இருப்பவர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். அன்னதானம் செய்பவர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கக்கூடாது. உணவு தயாரிப்பவர்கள் மற்றும் பரிமாறுபவர்கள் தன் சுத்தம் பேணவேண்டும். தாங்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள்.எனவே. அன்னதானத்தினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு துறைரீதியான நடவடிக்கைளுக்கு உட்படுத்தப்படுவர். சித்திரைத் தேர்திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடக்க, கோவில் நிர்வாகம், போலீஸார், மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.