பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
திற்பரப்பு: காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்காலை வரும் 25ம் தேதி நடப்பதை ஒட்டி, 19ம் தேதி முதல் புனித யாத்திரை துவங்குகிறது. பத்துகாணி வரம்பொதி காளிமலை, குமரி மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாகும். மார்த்தாண்ட வர்ம மகாராஜா, இங்கு எழுந்தருளியுள்ள தேவியின் மகிமை உணர்ந்து, 600 ஏக்கர் நிலத்தை வரியில்லா பூமியாக வழங்கியதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்புண்ணிய தலத்தில் காளிதேவியும், தர்மசாஸ்தாவும், நாகயக்ஷியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர். சித்ரா பவுர்ணமி அன்று மலை உச்சியில் பெண்கள் பொங்கல் படைத்து அம்மனை வழிபடுவது முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது. அன்று காலை ஐந்து மணிக்கு நிர்மால்ய பூஜை, சிறப்பு பூஜை, 9.30க்கு அகஸ்திய முனிவர் உட்பட 18 சித்தர்களுக்கு சங்கல்ப பூஜை நடக்கிறது. தொடர்ந்து தேவி பாகவத பாராயணம், அன்னதானம், சரஸ்வதி சகஸ்ரநாமம், ஸ்வயம்வர புஷ்பாஞ்சலி புஜை நடக்கிறது.
இரண்டாம் விழாவான 20ம் தேதி காலை நரசிங்க பூஜை, ஆயில்யபூஜை, சத்சங்கம், பத்ரகாளி ஸகஸ்ரநாம ஜெபம், மூன்றாம் விழாவான 21ம் தேதியும், நான்காம் விழாவான 22ம் தேதியும் சமய மாநாடு, அஷ்டதிரவிய அபிஷேகம், லட்சார்ச்சனை நடக்கிறது. ஐந்தாம் விழாவான 23ம் தேதி நவகலசபூஜை, சூலங்குத்தியில் விசேஷபூஜை, அஷ்ட ஐஸ்வர்ய லக்ஷ்மிகடாக்ஷ பூஜை நடக்கிறது. ஆறாம் விழாவான 24ம் தேதி சுதர்சன ஹோமம், மிருத்யுஞ்ஞய பூஜை, அஷ்டோத்தர சத நீராஞ்சனம், நெய்விளக்கு விசேஷ தீபாராதனை, ஏழாம் விழாவான 25ம் தேதி காலை மஹாகணபதி ஹோமம், மூட்டுகாணிகள் பூரண கும்ப மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்து வருதல், சமய மாநாடு நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு மேல் சித்ரா பவுர்ணமி பொங்காலை தீபம் வழங்கல், பொங்காலை, பவுர்ணமி பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு மகா திருகாளியூட்டு, வலியபடுக்கை சமர்ப்பணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் சலீம்குமார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.