பதிவு செய்த நாள்
12
ஏப்
2013
11:04
காஞ்சிபுரம்: தமிழ் புத்தாண்டு அன்று, மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அமரேஸ்வரர் அபிராமசுந்தரி கோவிலில், மாலை 6:30 மணிக்கு, ஸ்ரீ விஜய ஆண்டின் பஞ்சாங்கம், பொது பலன், 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரம் படித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, மாலை சொற்பொழிவு நடைபெற உள்ளன. கச்சபேஸ்வரர் கோவிலில், திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், 14ம் தேதி இரவு 8:00 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 4:30 மணி வரை, திருமுறை அகண்டபாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மற்ற கோவில்களிலும், புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 14ம் தேதி காலை 5:30 மணிக்கு, மகா ஹோமம், காலை முதல் இரவு வரை சிறப்பு தரிசனம் நடைபெறும். சுப்பிரமணிய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருப்போரூர்: செம்பாக்கம், ஜம்புகேஸ்வரர் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு, சுவாமி மற்றும் அம்மன் அழகாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். காலை 8:00 மணியிலிருந்து, லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 8:00 மணிக்கு சிவகுடும்பம் குறித்த ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். கந்தசுவாமி கோவிலில், அன்று மாலை விளக்கு பூஜை நடைபெற உள்ளது.