பதிவு செய்த நாள்
13
ஏப்
2013
11:04
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமென எம்.எல்.ஏ., குமரகுரு தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடக்கிறது. வரும் 23ம் தேதி சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியும், 24ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து திருநங்கைகள் கலந்து கொள்வர். விழாவை முன்னிட்டு கூவாகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து நேற்று முன் தினம் இரவு குமரகுரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் குறித்து கடந்த ஆண்டு சட்டசபையில் பேசினேன். இதையடுத்து முதல்வர் ஜெ., இதனை சுற்றுலாத் தலமாக அறிவித்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தங்கும் விடுதி, குடிநீர் தொட்டி, கழிப்பறை கட்டும் பணிகள் நடக்கின்றன. பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். வரும் 24ம் தேதிக்குள் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தேருக்கு புதிய சக்கரம் அமைத்து தேரோட்டம் நடத்தப்படும். பெரியசெவலை முதல் கோவில் வரையிலும், அயன்வேலூர் முதல் கோவில் வரையிலும் 1 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகளை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் இப்பணிகள் துவங்கும். கடந்த தி.மு.க., ஆட்சியின் போது நான் சட்டசபையில் கூவாகம் குறித்து வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. ஆனால் முதல்வர் ஜெ., சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். உளுந்தூர்பேட்டை தொகுதிக்குக் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் என எண்ணற்ற பல வளர்ச்சித்திட்டங்களைச் செய்துள்ளார். கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து 13 ஆண்டுகள் ஆவதால், முதல்வரிடம் எடுத்துக் கூறி அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.