ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் குத்தகை பாக்கி அறிவிப்பு வெளியிட்டும் பயனில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் குத்தகை தொகை செலுத்தாதவர்கள் குறித்த அறிவிப்பு பலகை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிட்டும் பணம் வசூலாகவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான நிலம், குளத்தில் மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு வகைகளிலிருந்து வருவாய்கள் வருகின்றன. இதில் பலர் இன்று வரை கோயிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகைகளை கட்டாமல் பாக்கி வைத்துள்ளனர். இதை வசூல் செய்யும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கோயிலுக்கு செலுத்த வேண்டியவர்களின் பெயர் மற்றும் முகவரி, சொத்துக்களின் விபரம், செலுத்தப்பட வேண்டிய பாக்கி தொகை போன்றவைகள் பற்றி கோயில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான செண்பகதோப்பு நிலத்தில் மரங்களின் பலன்கள், திருமுக்குளத்தில் மீன் பாசி, மறவன்குளம் கோதை பிராட்டி குளம், தாதன் குளம் பனை மரங்களின் மேல் பதனீர் இறக்கும் உரிமம், மறவன்குளம் பகுதி ஆறு ஏக்கர் நன்செய் நிலம் போன்றவைகள் மூலம் கோயிலுக்கு வசூலாக வேண்டிய 2012 ஜூலை 30 வரை 6.6 லட்ச ரூபாயை செலுத்தாதவர்களின் பெயர்களை கோயில் வாசலில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே பணம் கட்டியுள்ளனர். ஆனால் இந்த போர்டுகள் வைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இது வரை எவ்வித பாக்கி தொகையும் வசூலாகாதது வேதனை தரும் விஷயமாகும்.