ராமானுஜர், தனது சீடர்களிடம் பாசுரங்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு பாசுரத்தில்,சிந்து பூம் வேங்கடம் என்ற வரி வந்தது. பூக்கள் சிந்திக் கிடக்கும் வேங் கடமலை என்பது இதன் பொருள். இந்த விளக்கத்தை சொன்ன போது அவரது கண்களில் நீர் சுரந்தது. பூக்களின் பயன், மாலையாகத் தொடுத்து சுவாமிக்கு அணிவிப்பது. ஆனால், திருவேங்கடத்தில் (திருப்பதி) பறிக்க ஆளின்றி பூக்கள் வீணாகிறதே, என்ற கவலையே கண்ணீர் வரக் காரணம் என சீடர்கள் உணர்ந்தனர். இதையடுத்து அனந்தாழ்வான் என்ற சீடர், குருவின் விருப்பத்தை நிறைவேற்ற திருப்பதி சென்றார். அங்கேயே தங்கி, பூக்களை மாலையாக்கி வேங்கடமுடையானுக்கு நீண்டகாலம் புஷ்ப கைங்கர்யம் செய்தார். இப்போதும், திருப்பதி மலைக்குச் செல்லும் பெண்கள் பூச்சூடுவதில்லை. அங்குள்ள பூக்கள் அனைத்தும் ஏழுமலையானுக்கே சொந்தம் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.