பதிவு செய்த நாள்
17
ஏப்
2013
11:04
அவிநாசி: வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியம் ஒலிக்க, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான பெருங்கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6.30 மணிக்கு கொடிமரத்தின் முன் விநாயகர், சோமாஸ்கந்தர், கருணாம்பிகை அம்மன், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, கொடியேற்ற பூஜை நிகழ்ச்சிகள் துவங்கின. கொடிமரம் முன், சிறப்பு ஹோம பூஜைகள் நடந்து, கொடித்துணி, கோவில் பிரகார உலாவாக எடுத்து வரப்பட்டு, தர்ப்பை, மாவிலை தோரணங்களுடன், கொடிமரத்தில் கட்டப்பட்டது. பெங்களூரு வாழும் கலை ஆசிரம வேதவிக்ஞான் வித்யாபீட மகாபாட சாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில், மாணவர்கள், நான்கு வேதங்கள், தேவாரம், திருமுறைகளை பாரா யணம் செய்ய, கொம்பு, துத்தாரி, மத்தளம் உள்ளிட்ட பஞ்சவாத்தியம் முழங்க, கொடியேற்ற வைபவம் நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரத வீதியுலா நடந்தது. தேர்த்திருவிழாவில், இன்று, சூரிய, சந்திர மண்டல காட்சி, நாளை, பூத, அன்ன, அதிகார நந்தி மற்றும் கிளி வாகன காட்சிகள், 19ம் தேதி புஷ்பக, கைலாச வாகன காட்சி, 20ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், 21ல் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி, 22ல் உற்சவ மூர்த்திகள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.