பதிவு செய்த நாள்
18
ஏப்
2013
10:04
சேலம்: சேலத்தில், பத்தாவது ஆண்டாக திருவெம்பாவை கழகம் சார்பில், அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதத்தில், திருவெம்பாவை பெருவிழாக் கழகம் டிரஸ்ட் சார்பில், அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் ஆண்டு விழாவாக, நேற்று சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஸ்வாமி, அம்பாள், நாயன்மார் சிலைகள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஸ்வாமி - அம்பாள் வெள்ளி ரிஷபத்திலும், நாயன்மார்கள், சேக்கிழார் மற்றும் திருமுறைநாதர், 19 பல்லக்குகளிலும், சிறப்பு மேளக்கச்சேரி, பஞ்சவாத்ய இசை, குச்சாட்டம், ஓதுவார் மூர்த்திகள், இறைநெறி மன்றத்தினரின் திருமுறை இசை, தெய்வத்திருஉருவ அணிவகுப்போடு, திருவீதி உலாவானது கோவிலில் புறப்பட்டு, முதல் அக்ரஹாரம், தேர்வீதி, இரண்டாவது அக்ரஹாரம், பட்டக்கோவில், சின்ன, பெரியக்கடைவீதி, கன்னிகாபரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது. ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமச்சந்திரன், தொழிலதிபர் ஆதிபாலன், தலைமை ஸ்தானீகர் தியாகராஜசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறுபத்து மூவர் திருவீதி உலாவை காண பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். ஏற்பாடுகளை, திருவெம்பாவை பெருவிழாக் கழக அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் சந்திரசேகர், பொருளாளர் மோகன்ராம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.