பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
10:04
சென்னை: மனதில், அகம்பாவம் இருக்கும் வரை அமைதி ஏற்படாது. இனிமையான பேச்சு, எந்த இதயத்தையும் திறக்கவல்ல தங்கத் திறவு கோலாகும், என, மாதா அமிர்தானந்தமயி அறிவுரை வழங்கினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரம்மஸ்தான கோவிலின், 23ம் ஆண்டு விழா, நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. இவ்விரண்டு விழாவிலும், பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன. இரண்டு நாள் விழாவிலும், மாதா அமிர்தானந்தமயி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நேற்றைய விழாவில், மாதா அமிர்தானந்தமயி அருளாசி வழங்கி, பேசியதாவது: பிறரிடம் நமக்குள்ள அளவற்ற எதிர்பார்ப்பை கைவிட வேண்டும். அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் ஒவ்வொருவரும் ஓரளவு தான் வளர்ந்திருக்கின்றனர் என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிராமங்களில் வளர்ந்தவர்களின் கலாச்சாரம், நகரங்களில் வளர்ந்தவர்களின் கலாச்சாரத்தை காட்டிலும் வேறாக இருக்கும். எதிர்பாராமல் வரும் விருந்தாளியைபோல, குடும்பத்தில் ஏற்படும் விவாதங்கள், பெரும்பாலும், கணவன், மனைவியிடையே பிளவை ஏற்படுத்தி விடுகின்றன. குடும்பத்தில் கலந்துரையாடல் நிகழ்வது நல்லது தான். ஆனால், இது ஒருபோதும், விவாதமாக மாறுவதற்கு இடமளிக்க கூடாது. இனிமையான பேச்சு, எந்த இதயத்தையும் திறக்கவல்ல தங்கத் திறவுகோலாகும். மனதில் அகம்பாவம் இருக்கும் வரை, அமைதி ஏற்படாது. இறையருள் பெற, உண்மையான தியானம் அவசியம். தியானம் அருட்செல்வத்தையும், பொருள் செல்வத்தையும் கொடுக்கவல்லது. இவ்வாறு, மாதா அமிர்தானந்தமயி அறிவுரை வழங்கினார்.