பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
10:04
நகரி: திருமலையில், பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, புகாராக தெரிவிக்க வசதியாக, திருமலையில், இரண்டு இடங்களில் தொடுதிரை கணினி வசதியை, தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.முதல் கட்டமாக, சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பின்னர் திருமலையில் பக்தர்கள், அதிகம் கூடுகிற இடத்தில் தொடுதிரை வசதி, விரிவுபடுத்தப்படும். பக்தர்கள், திருமலையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ஆலோசனைகள் மற்றும் புகார்களை இவற்றில் பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமலையில், கவுஸ்துபம், பாஞ்சஜன்யம் விடுதி வளாகங்களில், அமைக்கப்பட்டுள்ள தொடுதிரை கணினிகளை, திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி, சீனிவாசராஜூ, தொடங்கி வைத்தார்.பக்தர்கள் தெரிவிக்கும் புகார்களை, தேவஸ்தான நிர்வாகத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் தொடுதிரையில் பதிவு செய்து, அதை உடனடியாக, தொடர்புடைய அதிகாரிக்கு, குறுஞ்செய்தியாக அனுப்புகிறார்கள். தற்போது, உதவியாளர்கள் துணையுடன் புகார்களை, பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், பக்தர்களே எளிமையாக புகார்களை பதிவு செய்யும் வகையில், வசதி ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.