பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
10:04
கும்பகோணம்: கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீராமநவமி பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான திருக்கோவிலாகும். இக்கோவிலில் ராமர், சீதாதேவி பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிப்பதால் தென்னக அயோத்தி என்றழைக்கப்படுகிறது.இங்கு, 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்துள்ளன. சிறப்புகள் பல பெற்ற இக்கோவிலில் ஸ்ரீராமநவமி விழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு ஸ்ரீராமநவமி கடந்த, 11ம்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் வெள்ளி சூர்யபிரபை, சேஷவாகனம், ஓலைச்சப்பரம், வெள்ளி அனுமந்த வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் ஆகியவற்றில் புறப்பாடு நடந்தது.கடந்த 17ம்தேதி மாலை சூர்ணாபிஷேகமும், நேற்று முன்தினம் 18ம்தேதி காலை வெண்ணைத்தாழியும் நடந்தது.விழாவின் முக்கியவிழாவான ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம் (19ம்தேதி) காலை 7.30மணிக்கு நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் தேரின் வடத்தை பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர்.விழாவில் நகர்மன்ற தலைவர் ரத்னா, துணைத்தலைவர் ராஜாநடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் செல்வராஜ், கும்பகோணம் வர்த்தக சங்க தலைவர் சேகர், கோவில்ர்வாக அதிகாரி சீனிவாசன் உள்பட திரளானோர் கலந்து பங்கேற்றனர். இரவு 8மணிக்கு தீர்த்தவாரி நடந்தது.