பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
11:04
அரியலூர்: அரியலூர் அருகே, கல்லங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கலியபெருமாள் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவில், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பல லட்சம் மக்களின் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.பக்தி சிரத்தையுடன் நடக்கும், இக்கோவிலின் ஆண்டு பெருந்திருவிழா, 19ம் தேதி ஸ்ரீராம நவமி நாளான நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்த, கொடி ஏற்றுவிழாவை முன்னிட்டு, உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் கொடி கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தி, பெருந்திருவிழாவுக்கான கொடி ஏற்றினர். விழாவில், கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா, 19ம் தேதி நேற்று துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வெள்ளிகருட சேவை, 23ம் தேதியும், திருக்கல்யாண உற்சவம் 25ம் தேதியும், தேரோட்டம் 25ம் தேதியும், ஏகாந்த சேவை 26ம் தேதி இரவு நடக்கிறது.