பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் புனித தீர்த்தத்தில் நீராட, வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, இடையூறாக வாகனங்கள் செல்வதால், பக்தர்கள் அச்சமடைகின்றனர். ராமமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராடி, தரிசனம் செய்கின்றனர். தற்போது, கோடை விடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம், அதிகரித்துள்ளது. நீராடும் பக்தர்கள், கோயில் கிழக்கு வாசலில் முன்புள்ள கவுண்டரில், தீர்த்த டிக்கெட் வாங்க, நீண்ட வரிசையில்(சுமார் 300 மீட்டர் தூரம்) காத்திருக்கின்றனர். அப்போது ஆட்டோ, சுற்றுலா கார்கள், நான்கு ரதவீதியில் நிறுத்தப்படுவதாலும், வீதியில் வலம் வருவதாலும், வரிசையில் நிற்கும் பக்தர்கள் மீது, மோதும் அபாயம் உள்ளது. மேலும், விழாக் காலத்தில் தேரில் வீதி உலா வரும், சுவாமி, அம்பாளுக்கு, சாலை ஒரத்தில் நிறுத்தும் வாகனங்களால்,இடையூறு ஏற்படுகிறது. இதுபோன்ற காரணத்தினால், நான்கு ரதவீதியில் வாகனங்கள் நிறுத்த, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. இதனைதொடர்ந்து, நான்கு ரதவீதியில், வாகனம் நிறுத்த அனுமதிக்க கூடாது என, எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட்டார். ஆனால் உத்தரவை, காற்றில் பறக்க விட்ட கதையாக, ஆட்டோ, கார்கள் நிறுத்துவது, தொடர்கிறது. இதை யார்தான் கவனிப்பார்களோ?