பதிவு செய்த நாள்
22
ஏப்
2013
10:04
அழகர்கோவில்: மதுரை, அழகர்கோவிலில் சித்திரை திருவிழா, நேற்று துவங்கியது. அழகர் மலையில் இருந்து, நாளை(ஏப்.,23) புறப்படும் கள்ளழகர், ஏப்., 25 ல், வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்நிகழ்ச்சிக்காக, நாளை மாலை, கண்டாங்கி பட்டு அணிந்து, கையில் வேல் கம்புடன், கள்ளழகர் வேடத்தில், தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார். வரும் வழியில், 408 திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். ஏப்., 24 காலை 6 மணிக்கு, மூன்றுமாவடியிலும், காலை 9 மணிக்கு புதூரிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடக்கிறது. வைகை ஆற்றில் இறங்குகிறார்: ஏப்., 25 ல், தங்க குதிரை வாகனத்தில், காலை 7.30 மணி முதல் 7.45 மணிக்குள், ஆற்றில் இறங்குகிறார். காலை 10 மணிக்கு, ராமராயர் மண்டகபடியில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலை, வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு புறப்படுகிறார். ஏப்., 26 காலை, சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்று இரவு, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 27 காலை, மோகினி அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர், ஏப்., 28 அதிகாலை, தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில், பூப்பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏப்., 29 காலை 9 மணிக்கு, கோயில் சென்றடைவார்.
17 கி.மீ., நடைப்பயணம்: தமிழகத்தில், அதிக நாட்கள் நடக்கும் திருவிழா, இதுதான். பக்தர்களை நேரில் சந்தித்து, ஆசி வழங்குவதற்காக, கள்ளழகர் 17 கி.மீ., தூரம் "நடைப் பயணம் மேற்கொள்கிறார். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில், பல இடங்களில் மெகா "டிவிக் கள் வைக்கப்படுகின்றன. பாலகிருஷ்ணன் எஸ்.பி., தலைமையில் 1100 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முதன்முறையாக, சுவாமியை தூக்கிச் செல்லும் சீர்பாதங்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.