பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
10:04
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று நடக்கவிருந்த லச்சார்ச்சனை பூஜை மரண யோகத்தில் நடத்திட தேதி குறிப்பிட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லட்சார்ச்னை பூஜை ரத்து செய்யப்பட்டது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில், 1,200 ஆண்டு பழமை வாய்ந்தது. சேலம் மட்டுமல்லாமல் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுகவனேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். கோவிலில் பூஜைக்கு தேதி குறிப்பதில் குளறுபடி ஏற்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட, பாலாலய விழாவுக்கு அர்ச்சகர் தியாகராஜன் மரண யோகத்தில் தேதி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்போது நடக்கவிருந்த பாலாலய விழா ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று லச்சார்ச்சனை பூஜை காலை, 9 மணிக்கு நடத்திட அர்ச்சகர் தியாகராஜன் தேதி குறிப்பிட்டு இருந்தார். புதன் கிழமையில் வரும் அஸ்தம நட்சத்திரம், மரண யோக காலமாகும். இன்று நாள் முழுவதும் மரண யோக காலமாக உள்ள நிலையில், சுகவனேஸ்வரர் கோவிலில் லச்சார்ச்சனை பூஜை நடத்திட பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுசம்பந்தமாக சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மரண யோகத்தில் லச்சார்ச்சனை பூஜை நடத்துவது சம்பந்தமாக விசாரணை செய்யப்பட்டது. புதன் கிழமை வரும் அஸ்தம நட்சத்திரம், மரண யோகம் என்பதால், இன்று நடக்க இருந்த லச்சார்ச்னை பூஜை ரத்து செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக சேலம் சுகவனேஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மாரிமுத்து விசாரணை செய்து வருகிறார்.