பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
11:04
திருமங்கலம்: மதுரை மீனாட்சிக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்ததாக ஐதீகம் உள்ள திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 8.15 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையோடு திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கின. புன்னியாவாசனம் செய்யப்பட்டு சுவாமி, அம்மனுக்கு மாலை, வஸ்திரம் அணிவிக்கப்பட்டது. தாரை வார்ப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து மீனாட்சியம்மன், பிரியாவிடைக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டது. மீனாட்சியம்மனாக சங்கர பட்டரும், சொக்கநாதராக சங்கரநாராயண பட்டரும், பெருமாளாக ஸ்ரீநிவாச பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். அம்மன் பச்சை பட்டும், பெருமாள் வெண்பட்டும் அணிந்திருந்தனர். மாலையில், அம்மன் காமதேனு வாகனத்திலும், சொக்கநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்திலும் வலம் சென்றனர். விளாச்சேரி: மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்தில், ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி-காசிவிஸ்வநாதர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. நிர்வாகிகள் விஸ்வநாதன், கண்ணன், மரகதவல்லி, சங்கரநாராயணன் கலந்து கொண்டனர்.