சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று லட்சுமிநாராயண பெருமாள், அழகர் திருக்கோலத்தில் ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி நடந்தது. சின்னமனூரில் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் பத்தாம் நாள் மண்டகப்படியான நேற்று முன்தினம் திருத்தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை அடுத்து, பதினோராம் மண்டகப்படியான நேற்று, லட்சுமிநாராயணப் பெருமாள், அழகர் திருக்கோலத்தில் சுரபி ஆற்றில் எழுந்தருளினார். சம்பிரதாயப்படி கோயிலிலிருந்து அழைத்து செல்லப்பட்ட சுவாமி, பக்தர்கள் புடைசூழ, காலை 7.35 மணிக்கு நதியில் எழுந்தருளினார். பின்னர் பெருமாள் கருட வாகனத்தில் பவனிவரும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மஞ்சள் நீராட்டு மற்றும் சுவாமிஅம்மன் புஷ்ப பல்லக்கில் நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். தொடர்ந்து இன்று பனிரெண்டாம் நாள் மண்டகப்படியில், லட்சுமி நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் பவனிவருதல், விடையாற்றி விழா, இரவில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளல், சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். அடுத்த மாதம் 2 ம் தேதி வரையில் விழா நடைபெறும்.