பதிவு செய்த நாள்
27
ஏப்
2013
11:04
திருப்பூர்: முக்தி அடைய நம்மால் முடியாது; பெருமாள் அருள்பாலிக்க வேண்டும், என சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். திருப்பூர் ஸ்ரீராம பஜனை மடம் சார்பில் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம், குமாரசாமி திருமண மண்பத்தில் நடந்து வருகிறது. சொற் பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது: ராமர் கால்பட்ட இடம் புண்ணிய பூமியாகும். ராமர் எவ்வளவு உயர்ந்தவரோ, அந்த அளவுக்கு எளிமையானவர். இரண்டும் இருப்பவர் களிடம் சரணாகதி அடைந்து விடுவோம். சரணாகதி அடைய செல்லும்போது என்ன தப்பு செய்தாலும், மறக்காமல், மறைக்காமல், மறுக்காமல், கூற வேண்டும். அப்போதுதான் சரணாகதி கிடைக்கும். முக்தி அடைய நம்மால் முடியாது; பெருமாள் அருள்பாலிக்க வேண்டும். அவருக்கு தொண்டுபுரிய வேண்டும். அவன் சரித்திரத்தை கேட்க, கேட்க, அன்பு ஏற்படும். ராமாயணத்தில் சீதையை மீட்க இலங்கை செல்ல ராமன், சுக்ரீவனிடம் வழி கேட்கிறான். கிழக்கு கடற் கரைக்கு வருகின்றனர். ராமன், கடல் அரசனை வணங்கி சரணாகதி அடைகிறான். அது பலிக்கவில்லை. நாம் சரணாகதி அடைந்தால் பலிக்கும்; பெருமாள் சரணாகதி அடைந்தால் பலிக்குமா? கடல் அரசன் கண்டுகொள்ளாததை கண்டு ராமன், கோபப்பட்டு அம்பை எடுக்கிறான். பயந்துபோன கடல் அரசன், சரணாகதி அடைந்து விடுகிறான். குரங்குகள் மலையை பெயர்த்து கடலில் பாலம் அமைக்கின்றன. இதற்கு அணில் துணை புரிகிறது. ஐந்து நாட்களில் பாலம் கட்டப்பட்டது. இலங்கை வந்தடைந்ததும், யுத்தம் துவங்கியது. படை அனைத்தையும் ராவணன் இழக்கிறான்; அவனும் இறக்கிறான். மண்டோதரி வந்து அழுகிறாள். உன்னை ராமன் கொள்ளவில்லை. உன் புலன்களை அடக்கத் தெரியாததால் இந்த நிலை வந்தது; புலன்களை அடக்க தெரிந்தால் இந்த நிலை வந்திருக்காது என்கிறார். ராமன் வெற்றி பெற்றதை அசோகவனத்தில் உள்ள சீதையிடம் கூறப்படுகிறது. சீதை மகிழ்ச்சி அடை கிறாள். சீதையை அழைத்துக் கொண்டு ராமன் அயோத்தி வருகிறான். ராமனிடம் ஆட்சியை பரதன் ஒப்படைக்கிறான். பரதன் வெண்குடை ஏந்த, லட்சுமணன் சம்மரம் வீச, சிறப்பாக பட்டாபிஷேகம் நடக்கிறது. ராமன் 11 ஆயிரம் ஆண்டுகள் நாட்டை ஆண்டான். எடுத்த காரியத்தை செய்து முடிப்பவன் ராமன். ராமாயணத்தை படிக்க, படிக்க, சொத்து இல்லாதவர்களுக்கு சொத்து கிடைக்கும்; குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்; உடல் ஆரோக்கியம், புகழ், குடும்ப ஏற்றம் நடக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.