பதிவு செய்த நாள்
03
மே
2013
11:05
உடுமலை: உடுமலையில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் மிதந்து வந்தது. தேர் செல்லும் வீதிகளிலும் பக்தர்கள் படை சூழ்ந்ததால், நகரமே திருவிழாக்கோலம் பூண்டது.உடுமலை நகரின் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 16ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 23ல் கம்பம் போடுதலும், 26ம் தேதி கொடியேற்றமும், பூவோடு எடுத்தலும், நேற்றுமுன்தினம் அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது.தேரோட்டம்: கோவிலில் நேற்று காலை 6.30 மணிக்கு அம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை 4.10 மணிக்கு மேள, தாளங்கள், வேட்டுகள் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷத்துடன், அம்மன் அமர்ந்திருந்த அலங்கார திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தேரின் நான்கு புறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் தேர் அசைந்து, அசைந்து அழகாக சென்றது. பக்தர்களுக்கு உதவியாக, பாலக்காட்டிலிருந்து வந்திருந்த கோபாலகிருஷ்ணன் என்கிற யானை தேரை முன்னுக்குத்தள்ளியது.தேரோடும் வீதிகளான பழநி ரோடு, தளி ரோடு, குட்டை ரோடு, தங்கம்மாள் ஓடை வீதி வழியாக தேர் சென்றதை வீடுகளிலிருந்தும், மாடியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அம்மனை தரிசித்தனர்.
வரவேற்பு: தங்கம்மாள் ஓடை தலைகொண்டம்மன் கோவிலுக்கு வந்த தேர் போது, அம்மனுக்கு வரவேற்பும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் ஷோபனா, பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.