பதிவு செய்த நாள்
07
மே
2013
11:05
கரூர்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் 99வது ஆராதனை விழா, வரும் 20 ம் தேதி கோலாகலமாக நடக்கிறது.கரூர் மாவட்டம் நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் ஆராதனை விழா நடந்து வருகிறது. நடப் பாண்டு வரும் 15 ம் தேதி காலை 8 மணிக்கு லட்சார்ச்சனையுடன் விழா தொடங்குகிறது.இதையடுத்து, நாள்தோறும் காலை 11 மணிக்கு நெரூர் அக்ரஹார தெருவில் இருந்து சதாசிவ பிரமேந்திரர் உருவபடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது ஜீவசமாதியில் வைத்து லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மஹன்யாஸ அபிஷேகம், வேதபராயணம் ஆகியவை நாள்தோறும் நடக்கிறது.தொடர்ந்து, வரும் 20 ம் தேதி 99 வது ஆராதனையை முன்னிட்டு காலை காலை 6 மணி முதல் சதாசிவ பிரமேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனையும், ஸந்தர்பனையும் நடக்கிறது.அதை தொடர்ந்து சதாசிவ பிரமேந்திரர் உருவபடம் அவரது ஜீவசமாதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு லட்சார்ச்சனை நடக்கும். தொடர்ந்து அன்று மதியம் 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்படும். பிறகு, பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்க பிரதட்சணம் நடக்கிறது. அப்போது, சதாசிவ பிரமேந்திரரின் கீர்த்தனைகள் பாடப்படும். ஆராதனை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கும் போது, அதில், எதாவது ஒரு ரூபத்தில் சதாசிவ பிரமேந்திரர் அமர்ந்து சாப்பிடுவதாகவும் ஐதீகம் உள்ளது. இதனால், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் நிகழ்ச்சி, ஆராதனை விழாவில் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஏற்பாடுகளை நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திர சபா, ஸத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிர ஸ்ட் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.