பதிவு செய்த நாள்
23
பிப்
2011
05:02
மாதவ முனிவரான மாண்டவ்யர் இமயமலையில் அடர்ந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவம் ஈடு இணையற்றது. சிவனை வணங்கி அவரது உயரிய அருளைப்பெற்றிருந்தார். உலகிலுள்ள அனைத்து முனிவர்களும் மாண்டவ்யரின் தவத்திற்கு முன்னால், தங்களது தவம் மிகவும் சாதாரணமானது என்பதை உணர்ந்திருந்தனர். எனவே அவர்கள் மாண்டவ்யருக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர். அந்த மாமுனிவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஒரு முறை சாலவ தேசத்தில் கள்வர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்கள் பொதுமக்களை கொன்று பொருள்களை திருடிச் சென்றனர். காவலர்களால் இவர்களை பிடிக்கவே முடியவில்லை. கொள்ளளையர்களின் தலைவன் ஒரு திட்டமிட்டான். தன் கூட்டாளிகளை அழைத்து, இப்படி சிறிய திருட்டை செய்வதை விட்டு விட்டு, அரண்மனை கஜானாவை கொள்ளையடித்து விட்டால் சொகுசான வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினான். தலைவனின் திட்டப்படி கொள்ளையர்கள் அரண்மனைக்குள் புகுந்து காவல் காத்த அத்தனை வீரர்களையும் கொன்று கஜானாவை கொள்ளையடித்து குதிரைகளில் தப்பியோடினார். இவைகளை கவனித்த காவலர்கள் அவர்களை விரட்டினர். களைந்து போன திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களை தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்யரின் ஆசிரமத்திற்குள் போட்டு விட்டனர். அங்கே வந்த காவலர்கள் ஒளிந்திருந்த திருடர்களை பிடித்தனர்.
தவத்தில் இருந்த மாண்டவ்யரை எழுப்பிய போது அவர் அசையவே இல்லை. எனவே அப்படியே மன்னனிடம் தூக்கி சென்றனர். மன்னன் எப்படி கேட்டும் மாண்டவ்யர் அசையவே இல்லை. இதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரை கழுவில் ஏற்றும் படியும், மற்ற திருடர்களை கொன்றுவிடும் படியும் உத்தரவிட்டான். முனிவர் கழுவில் தொங்கிவிடப்பட்டார். அவரது உடல் முழுவதும் ஊசி குத்தப்பட்டிருந்தது. நெஞ்சில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. அப்போது வானத்தில் சென்று வசிஷ்டர் முதலான முனிவர்கள் இந்த செயலை பார்த்து வந்து முனிவரை வணங்கி மாண்டவ்யர் என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது தான் மாண்டவ்யர் கண்விழித்தார். இதைப்பார்த்த காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் வந்து, அறியாமல் தான் செய்த தவறிற்கு முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். பின் எமலோகம் சென்ற முனிவர் எமதர்மராஜனிடம், இந்த பிறவியில் தான் செய்யாத பாவத்திற்கு ஏன் தண்டனை கொடுத்தாய் என கேட்டார். நீ சென்ற பிறவியில் சிறு வயதில் ஒரு தட்டான் பூச்சியை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு முள்ளை செருகி விளையாடினாய் அந்த வினைப்பயன் தான் இது என்றார் எமன். அதற்கு முனிவர், எமதர்மராஜனே ! நான் சிறுவயதில் அறியாமல் செய்த தவற்றுக்கு, என்னை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் காரணம். எனவே அறியாமல் சிறுவயதில் செய்யும் தவறுக்கு தண்டனையை பெற்றோர்களுக்கும் பிரித்து தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். எமனும் சம்மதித்தார். உடனே முனிவர், தர்மராஜா, நீ எப்படியேனும் எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். எனவே மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் சகோதரன் விதுரனாக பிறந்து துரியோதனன் அவையில் வேலைக்காரி மகன் என அவமானப்படுத்தப்படுவாய் என கூறினார்.எனவே, குழந்தைகளை எதற்கும் தீங்கு செய்ய விடாமல் அன்பின் வழி நடத்தி செல்ல வேண்டும்.