பதிவு செய்த நாள்
11
மே
2013
11:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த சித்திரை மாத கிருத்திகை விழாவில், ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த சித்திரை மாத கிருத்திகை விழாவில், அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் செய்யப்பட்டது, காலை, 11:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.நீண்ட வரிசை:கிருத்திகை விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி காவடிகளுடன் வந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை ஒரு லட்சம் பக்தர்கள், மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். இரவு, 7:30 மணிக்கு வெள்ளித் தேரில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்போரூர்:இங்குள்ள, பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில் பிரதானமாக கொண்டாடப்படும் சித்திரை மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூவருக்கு அபிஷேகம் நடந்தது. வெளிபிரகாரத்தில் உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் பலர், பிராத்தனையாக மொட்டை அடித்து சரவணப்பொய்கையில் நீராடினர். சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்ட சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.