அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கியவளே! அருள்நெஞ்சினர் உள்ளத்தில் குடியிருப்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வை என்றென்றும் எங்கள் இல்லத்தில் நிலைத்து இருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வு அருள வேண்டும். பூங்கொடியே! இளமயிலே! அலமேலு மங்கை தாயே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதா! பாற்கடலில் உதித்த அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக. முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரை தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் உறைபவளே! நிலவைப்போல குளிர்ச்சியான பார்வையால் அருள்மழை எங்கள் மீது பொழிவாயாக.ண நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே! குறையில்லா வாழ்வருளும் கோமளவல்லியே! செங்கமலத்தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!
மங்கலரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வேண்டிய வரம்அருளும் கற்பகமே! சிவந்த தாமரை மலரை இருப்பிடமாகப் பெற்றவளே! அம்மா! உன் அருளால் இந்த உலகம் செழிக்கட்டும். உயிர்கள் இன்புற்று வாழட்டும்.