தருமபுரம் மடத்தை நிறுவியவர் குருஞானசம்பந்தரின் குருநாதர் கமலை ஞானப்பிரகாசர். குருநாதர் இரவில் எங்காவது செல்லும் போது கையில் விளக்கேந்தி வரும் பணி குருஞானசம்பந்தருடையது. ஒருநாள் வீட்டுக்குள் நுழையும் முன் சீடனிடம், இங்கேயே நில்! இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சீடன் நிற்பதை மறந்துவிட்டு வேறு விஷயங்களில் குரு கவனம் கொண்டார். நேரம் சென்று கொண்டே இருந்தது. வெளியில் மழை பெய்யத் தொடங்கியது. குருவின் வார்த்தையை மீற மனமில்லாமல் அங்கேயே அசையாமல் நின்றார் குருஞானசம்பந்தர். வெகுநேரம் கழித்து வெளியில் வந்த குருநாதர் அவரின் குருபக்தி கண்டு கண் கலங்கினார். அவருக்கு ஒரு ஆச்சர்யமும் காத்திருந்தது. குருஞானசம்பந்தரின் கையில் இருந்த விளக்கும் மழையில் அணையவில்லை. சீடனை நோக்கி, உனக்கு ஞானம் கை கூடி விட்டது. நீயும் குருவாக இருக்கத் தகுதி பெற்றுவிட்டாய் என்று மகிழ்வோடு வாழ்த்தினார்.