வேதகால கடவுள் எனப் போற்றப்படுபவர் அக்னி. யாகத்தீயில் இடும் ஆகுதிப்பொருட்களையும், மந்திரங்களையும் அந்தந்த தெய்வங்களிடம் சேர்க்கும் பணி இவருடையது. ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில், முதல் ஸூக்தத்திலேயே இவரைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. தெய்வீக சக்கரவர்த்தி என்று இவரை அழைப்பர். இவருக்குவஹ்னி என்றும் பெயருண்டு. இதற்கு தூக்கிச் செல்வது என பொருள். அந்தணர்கள் இடும் ஆகுதியை எடுத்துச் செல்வதால் இந்தப் பெயர் பெற்றார். விண்ணுலக தேவதைகளோடு, மண்ணுலக மக்களை இணைப்பவராக இருப்பதால், அக்ரே நயதி எனப்படுகிறார். இதற்கு முன்னால் இருந்து கொண்டு அழைத்துச் செல்பவர் என்று பொருள். வேள்வித்தீயில் நெய்யை இடும்போது அக்னி கொழுந்து விட்டு எரியும். அதனால், நெய்யை விழுங்குபவர் என்னும் பொருளில் தனூனபாத் என்றும் அழைக்கப்படுகிறார்.