பதிவு செய்த நாள்
14
மே
2013
11:05
புதுக்கடை:கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குட பவனி நேற்று(13ம் தேதி) நடந்தது.கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் திருவிழாவான நேற்று(13ம் தேதி) காலை அம்மன் அபிஷேக பால்குட பவனி மார்த்தாண்டம், நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து துவங்கியது. தேவஸ்தான பஜனைக்குழுவுடன், விளக்குகெட்டு, முத்துக்குடை, தாலப்பொலி, பஞ்சவாத்தியம், செண்டைமேளம், சிங்காரிமேளம் முழங்க, 11 யானைகளுடன் சந்தன காவடி, எண்ணெய் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி பக்தர்கள் வெட்டுவெந்நி, காப்புக்காடு, முன்சிறை வழியாக கோயில் வளாகம் வந்தடைந்தனர். மதியம் அம்மனுக்கு பால், பன்னீர் மற்றும் சந்தன அபிஷேகம், பாலமுருகனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், குத்தியோட்டம், பூமாலை, கைவிளக்கு, பிடிப்பணம் போன்ற நேர்ச்சைகள், மாலை அம்மன் வடவீதி பவனி, இரவு சிந்துகுமார் தலைமையில் சமயமாநாடு நடந்தது. பத்தாம் திருவிழாவில் இன்று(14ம் தேதி) காலை வில்லிசை, ஆறாட்டுப்பலி, மாலை அம்மன் தென்வீதி ஆறாட்டு, இரவு பா.ஜ., மூத்த தலைவர் காந்தி தலைமையில் சமயமாநாடு நடக்கிறது. தொடர்ந்து, வானில் வர்ணஜாலம் காட்டும் போட்டி வாணவேடிக்கை நடக்கிறது. போட்டியை காண குமரி மற்றும் கேரள பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வருவது வழக்கம். ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவர் குமரேசதாஸ், செயலாளர் சைலஸ்ராஜ், துணைத்தலைவர் கேசவன், இணைச்செயலாளர்கள் தர்மராஜ், சந்தோஷ்குமார், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.