பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
வில்லியனூர்:வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், திருப்பணியையொட்டி, வாசற்கால் அமைக்கும் பணி நேற்று நடந்தது.வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், 11ம் நூற்றாண்டில் தருமபால சோழ மன்னரால் கட்டப்பட்டது. புதுச்சேரியில் மிகப் பழமையான இக் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள ரூ.11.55 கோடி திட்ட மதிப்பீடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.பொதுப்பணித்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ள திருப்பணி தொழில்நுட்பக் குழு அமைக்கப் பட்டது. அதையடுத்து, திருப்பணிக்கான பாலஸ்தாபனம் கடந்தாண்டு டிச., 3ம் தேதி துவங்கியது. தொடர்ந்து திருப்பணி நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் வள்ளுவர் சிற்ப கலைக் கூடத்தில், ஒன்றரை லட்சம் ரூபாய்செலவில், 11 அடி உயரம், 1.25 அடி அகலம், 11 இன்ச் கனம், மேல்படி 8.25 அடியும், கீழ் படி 7.25 அடி அளவுள்ள கருங்கல் தூண்களில், 15 நாட்களாக இயந்திரம் மற்றும் கை வேலைப்பாட்டில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவை லாரி மூலம் கொண்டுவரப்பட்டு, கோவில் முதல் வாசற்கால் அமைக்கும் பணி நடந்தது.காலை 6.00 மணிக்கு, பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை செய்து, வாசற்கால் அமைத்தனர். செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, கோவில் நிர்வாக அலுவலர் மனோகரன், சிவனடியார்கள் பங்கேற்றனர்.