காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 11 மற்றும் 12ம் தேதி சுப்ரமணியர் உற்சவமும், கடந்த 14ம் தேதி இரவு அடியார் நால்வர் உற்சவம் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு அடியார்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அடியார்கள், புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.19ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 21ம் தேதி காலை 7 மணிக்கு செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.