பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
சூலூர்:காட்டூர் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், அம்மன் திருவீதி உலா நேற்று நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்தனர்.சூலூர், கலங்கல் ரோடு காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 30ம்தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 7ம்தேதி கம்பம் நடப்பட்டு, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மாலையில் பக்தி இசை, பரதநாட்டியம், தேவராட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 12ம்தேதி திருவிளக்கு பூஜை நடந்தது.நேற்று, நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், அம்மன் திருவீதி உலா துவங்கியது. ஏராளமான பெண்கள் தீர்த்த குடம், பால்குடம் ஏந்தி வந்தனர். அம்மன் சப்பரம் சூலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை, மாவிளக்கு மற்றும் அன்னதானம் நடந்தது. இரவு வாணவேடிக்கை மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு நடக்கிறது.