பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், தேரடி ஆஞ்சநேயர் கோவில் உண்டியல், கடந்த 29 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால், அதில் இருக்கும், ரூபாய் நோட்டுகள் செல்லரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம், காந்தி ரோட்டில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இது, வரதராஜ பெருமாள் கோவிலின் உப கோவிலாகும். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பெரிய இரும்பு உண்டியல் உள்ளது.துவக்கத்தில், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டு, வங்கியில் போடப்பட்டு வந்தது. கடைசியாக, 1984ம் ஆண்டு உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்போது, 17 ஆயிரம் ரூபாய் பணம், நோட்டுக்களாகவும், நாணயங்களாகவும் இருந்தன.இந்நிலையில், இக்கோவில் அர்ச்சகர் ஒருவர், ஆஞ்சநேயர் கோவில் தங்கள் பரம்பரைக்கு சொந்தமானது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ணுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அதே ஆண்டு இறுதியில், உண்டியல் நிரம்பி, காணிக்கைகள் வழிந்ததால், உண்டியல் மூடப்பட்டு, "சீல் வைக்கப்பட்டது. இதனால், இரண்டு மாதத்திற்கு, ஒரு முறை உண்டியல் மூலம் கோவில்நிர்வாகத்திற்கு கிடைத்து வந்த வருவாய், நின்று போனது.கோவில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், கடந்த, 29 ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதனால், அதில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் சிதிலம் அடையும் அபாயம் உள்ளது. இந்நிலையில், காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மீட்க, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.