பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
கரூர்: நெரூரில் நேற்று நடந்த சதாசிவ பிரமேந்திராள், 99வது ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்ஷணம் நடந்தது. கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 14ம் தேதி காலை, 8 மணிக்கு லட்சார்ச்சனையுடன் ஆராதனை விழா துவங்கியது. இதையடுத்து நாள்தோறும் காலை, 11 மணிக்கு நெரூர் அக்ரஹார தெருவில் இருந்து சதாசிவ பிரமேந்திராள் உருவபடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது ஜீவசமாதியில் வைத்து லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மஹன்யாஸ அபிஷேகம், வேதபராயணம் ஆகியவை நாள்தோறும் நடந்தது. ஆராதனையை முன்னிட்டு நேற்று காலை, 6 மணி முதல், சதாசிவ பிரமேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனையும், ஸந்தர்பனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து சதாசிவ பிரமேந்திராள் உருவபடம் அவரது ஜீவசமாதிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சிறப்பு லட்சார்ச்சனைகள் நடந்தது.
தொடர்ந்து மதியம், 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. பக்தர்கள் சாப்பிட்டு முடித்த இலையில், ஆண், பெண் பக்தர்கள் அங்கபிரதட்ஷணம் செய்தனர். அப்போது சதாசிவ பிரமேந்திராள் கீர்த்தனைகள் பாடப்பட்டது. ஆராதனை விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலையில் அன்னதானம் வழங்கும் போது, அதில் எதாவது ஒரு ருபத்தில் சதாசிவ பிரமேந்திராள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் ஐதீகம் உள்ளது. இதனால் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்ஷணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. விழாவில் கலெக்டர் ஜெயந்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கீதா, நெரூர் பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை விழாவையொட்டி "காலைக்கதிர் சார்பில் சிறப்பு மலர் இலவசமாக வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த சதாசிவ பிரமேந்திராளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரிய தகவல்களை, ஆராதனை விழாவுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் படித்தனர்.